Saturday 6 August 2016

கால்கள் - அபிலாஷ் சந்திரன்

# கால்கள் - (2014 யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்)

# அபிலாஷ் சந்திரன்
விலை ரூ.400/-


• எல்லா திசைகளிலும், நிதானமாக பரந்து, விரிந்து செல்லும் இந்த நாவல், வாசகனின் கவனத்தையும், நுண்வாசிப்பையும் கோருகிறது. இந்த நாவலின் களமும், உளவியல் சார் கதை சொல்லும் விதமும், அபிலாஷை தமிழில் முக்கியமாக கவனிக்க வேண்டிய, தனித்துவம் மிக்க இளம் எழுத்தாளராக முன்னிருத்துகின்றன.

மழைத்தும்பிகள் - அறிவுமதி

# மழைத்தும்பிகள்
# கவிஞர் அறிவுமதி
# விலை ரூ.140/-


நண்பர்களாய் காமம் உணர்வதற்குள்
கடந்து விடுகின்றன
ஆறேழு ஆண்டுகள்

நம்புங்கள்
நம்மைவிடத் தெளிந்தவர்கள்
நம் பிள்ளைகள்

காதலர் நாள்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தாலிகள் வைத்திருக்கிறீர்களா?

இப்படி எளிய சொற்களில் இனிய மற்றும் அரிய எண்ணங்களைக் கூறி, மழைத் தும்பிகள் மூலம் இளையோரை தன்பால் ஈர்த்தார் பாவலர் அறிவுமதி.
உடல், உயிர், இனம், மொழி, சமுதாயம் ஆகியனவற்றின் மீதான அளவு கடந்த காதலை மிக அளவான சொற்களில் வெளிப்படுத்தி அவர் எழுதிய பாக்கள், குங்குமம் வார ஏட்டில் தொடராக வெளியானபோதே ஆகப்பெரும் வரவேற்பைப் பெற்றன.வாராவாரம் சிதறிய தேன் துளிகள் இப்போது பெரும் தேனடையாக உருவாகியிருக்கிறது. தொடராக வந்த பாக்கள் இப்போது புத்தகமாக வடிவெடுத்திருக்கிறது.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ்

# ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"
# ஜான் பெர்க்கின்ஸ்
# தமிழில்: இரா.முருகவேள்
# விலை ரூ.230/-

உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்கிற எண்ணம் பரவலாக உண்டு. ஆனால், அது போலி என்றும், அந்த எண்ணத்திற்குப் பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலகம் முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைவுச் சதிவேலைகளை செய்து வருகிறது எனபதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.
மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளது இந்நூல்

உலக சினிமா வரலாறு – ஜாக் சி.எல்லீஸ்

# உலக சினிமா வரலாறு – ஜாக் சி.எல்லீஸ்
# தமிழில்: வேட்டை எஸ்.கண்ணன்
# விலை ரூ.495/-


நான் சினிமாவைப் புரிந்துகொள்ள இதை வாசிக்கவில்லை, ஒரு கலைவடிவம் எப்படித் திரண்டு உருவாகி வருகிறது என்று அவதானிக்க – அது எப்படி சமூகத்தின் பல்வேறு உள்ளோட்டங்களால் தன் தனித்துவத்தை அடைகிறது என்று பார்க்க; என்று பார்க்க அதன் வீச்சு சமூகத்தை எப்படி மாற்றியமைக்கிறது என்று புரிந்துகொள்ள வாசித்தேன்.
சமீபத்தில் இத்தகைய ஒரு முழுமையான பார்வையை அளித்த பிறிதொரு நூலை நான் வாசிக்கவில்லை… அறுநூறூ பக்கம் கொண்ட இப்பெரிய நூல் நெடுங்காலமாகவே ஒரு கிளாசிக் என்று கருதப்படுவது – இதை சரளமான மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் வேட்டை எஸ்.கண்ணன்
- எழுத்தாளர் ஜெயமோகன்

மஹாஸ்வேதா தேவி கதைகள் - தமிழில்: புவனா நடராஜன்



#

# மஹாஸ்வேதா தேவி கதைகள்
# ரூ.280/-
# தமிழில்: புவனா நடராஜன்


மஹாஸ்வேதா தேவி: வங்கமொழி எழுத்தாளரும் பழங்குடி மக்களுக்காகப் போராடிய சமூக ஆர்வலராமான இவர் 91 வயதில் நேற்று கொல்கத்தாவில் காலமானார். 
1926 ஆன் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் டாக்காவில் பிறந்த இவர் தந்தை மணீஷ் காடக், தாயார் தாத்ரி தேவி ஆவர். இருவரும் வங்கமொழியில் புகழ்பெற்ற கவிஞர்களாக விளங்கினர். இலக்கியம், சமூகப் பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டிய மஹாஸ்தேவி தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.

1979 – சாகித்ய அகாடமி, 
1986 – பத்மஸ்ரீ, 
1996 – ஞானபீடம், 
1997 – ரமோன் மகசேசே, 
2006 – பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்

நேற்று காலமான மஹாஸ்தேவிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘வங்பத்தின் தாய், எனது வழிகாட்டியை இழந்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
# காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேறகாது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பவை அவருத எழுத்துக்கள். வாசகரை சிந்திக்க வைப்பவை. தமிழில் முதன்முறையாக மஹாஸ்வேதா தேவியின் வீரியமிக்க எழுத்துக்கள் உங்கள் கைகளில்

ஜாதியற்றவளின் குரல் - ஜெயராணி

# ஜாதியற்றவளின் குரல்
# ஜெயராணி
# 250/-



கல்லூரிப் படிப்பு முடிந்ததும் வருமானத்துக்கான வேலை வாய்ப்புகளைத் தேடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக தலித்துகளின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை தேடி வெயிலிலும் புழுதியிலும் அலைந்து திரிந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முதல் தலித் பெண் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயராணிதான் என்று கருதுகிறேன்.
- எஸ்.வி.ராஜதுரை

நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையை பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகிவிட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும், பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனே அநீதியும் நேர்மையின்மையும்தானே! பார்ப்பனர்களின் பிடியிலிருக்கும் வெகுமக்கள் ஊடகங்களின் நிறம் மட்டும் கறுப்பாக இருந்துவிட எந்த நியாயமும் இல்லை.
- ஜெயராணி

Wednesday 27 July 2016

வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன்

# வெண்ணிற ஆடை (வாழ்வியல் கதைகள்)
# சரவணன் சந்திரன்
# ரூ.110/-

இந்தச் சமூகத்தின் சாம்பல் நிறப் பக்கங்கள் நாங்கள். இந்தச் சமூகம் மறக்க நினைக்கிற மனிதர்கள் நாங்கள். இந்தச் சமூகத்தை அச்சமூட்டுபவர்கள் நாங்கள். சாம்பல் மனிதர்கள் நாங்கள். சாம்பலாகிப் போன கதைகளின் மனசாட்சி. இந்தச் சமூகம் எங்களை விரும்பாவிட்டாலும் நாங்கள் இந்தச் சமூகத்தை விரும்புகிறோம். இதயத்தில் அறையும் இந்தக் கதைகளுக்காகவாவது இந்தச் சமூகத்தை விரும்புகிறோம்

ஐந்து முரலைகளின் கதை - சரவணன் சந்திரன்

# ஐந்து முதலைகளின் கதை (நாவல்)
# சரவணன் சந்திரன்
# ரூ.150/-


தொழில் தேடி திரவியம் தேடி நட்பைத் தேடி தைமூர் சென்றுதோல்வியுடன் திரும்பிய இளைஞனின் கதைதான் ஐந்துமுதலைகளின் கதை. நமக்குத் தெரியாத தைமூரின் தட்பவெப்பநிலையில் தொடங்கி, நாய்க்கறி, காதல், காமம், அட்டை,வெள்ளரிக்காய் என ஒரு டாக்குமெண்டரியைப் போல அத்தனைவிவரங்கள். கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார் சரவணன்.
வாசிப்பதற்கு எளிமையாக இயல்பான மொழியில் நாவல் பரபரவெனபோகிறது. புதிய பிரதேசம், அறிமுகம் இல்லாத கடல் அட்டைத்தொழில், அன்பும் பகையும் நிறைந்த நட்பு வட்டம், சூழ்ச்சி எனநாவலின் கதைப்போக்கில் சரவணன் விளையாடுகிறார்.
தொழில் என்பது வெற்றி மட்டுமல்ல என்பது புரிகிறது.முயற்சிகளுக்குத் தோல்வி இல்லை. பத்திரிகையாளராக இருக்கும்அனுபவம் சரவண னுக்கு நிறையவே கைகொடுத்திருக்கிறது.

ஒரு நாவல் என்பது பெருநிலப்பரப்பாக பரந்து விரிந்த மானுடவாழ்வின் முழுமையாக, பல எல்லைகளை தொடவேண்டும்என்பார்கள். அப்படி தொட்டுப் பார்க்கும் முதல் முயற்சியில்வென்றிருக்கிறார் சரவணன்.

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

# ரோலக்ஸ் வாட்ச் (நாவல்)
# சரவணன் சந்திரன்ல்
# ரூ.150/-

நாவலில் மிக முக்கியம் - அதன் வேகம் - ஒரு நாவல் எல்லா தளங்களையும், எல்லா வாசகனையும் எப்போதும் திருப்திப் படுத்த வேண்டியதில்லை. ஆனால், இந்நாவல் நிறைய விசயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிச் செல்கிறது. நினைத்த மாத்திரத்தில் ஸ்விட்சைத் தட்டினதும் பொறிகள் இயங்க, கம்பி வடங்களில் உயரெழுந்து, வளைந்தும், நிமிர்ந்தும், கீழிறங்கியும் நம்மை மிரட்டுகிற “ரோலர் கோஸ்டர்” அனுபவத்தை “ரோலக்ஸ் வாட்ச்” நாவலை வாசிக்கும் போது பெறமுடியும்.

Tuesday 26 July 2016

எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் - மருதன் (சிறுவர் நூல்)

# எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் (சிறுவர் நூல்)

# மருதன்

# விலை ரூ.45/-


சாக்ரடீஸ், அலெக்ஸாண்டர், ஜோன் ஆஃப் ஆர்க், நெல்சன் மண்டேலா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், கிரேஸி ஹார்ஸ் போன்ற பெரிய பெரிய மனிதர்களைக் கண்டுகூட கதைக்குப் பயமில்லை. ஐயோ, அவர்களையெல்லாம் தொந்தரவு செய்யாதே என்று தடுக்கத் தடுக்க கேட்காமல் பாய்ந்து சென்று அனைவருடனும் ஒன்றுகலந்துவிட்டது கதை. எல்லோரும் நிஜமாகவே பெரிய மனிதர்கள் என்பதால் யாருமே கதையை ஆட்சேபிக்கவில்லை. அனைத்தையும் மறந்து கதையோடு ஒன்றுகலந்துவிட்டார்கள்…

மாயக்கண்ணாடி - உதயசங்கர் (சிறுவர் கதைகள்)

# மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
# உதயசங்கர்

# விலை ரூ.70/-


மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏறபடுத்த யத்தனிக்கும் கதைகள். அந்த விழிப்புணர்வ அன்பெனும் பெருநதியில் குழ்தைகள் எப்போதும் மூழ்கித் திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள்

Monday 25 July 2016

பார்த்தீனியம் - தமிழ்நதி

# பார்த்தீனியம் (நாவல்)

# தமிழ்நதி

# விலை ரூ.490/-


அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையஅல் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.

தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிர் கலந்த உறவுகளை, சமூக நேசத்தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.

உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும்.

-    பிரபஞ்சன்  

ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி

# ஒரு கூர்வாளின் நிழலில் . .
# (புலிகளின் மகளிரணித் தலைவியின் தன் வரலாறு)
# தமிழினி

# விலை ரூ.125/-


தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்துவிட்டதே என்ற துக்கமும் கேவலும். அதே நேரம் உண்மையின் கூர்முனைகள் யாருக்கும் அஞ்சாமல் பல பிம்பம்களைக் கீறுகின்றன. நேர்மையின் சித்திரங்கள் பிரச்சாரத்தின் நெடுஞ்சுவர்களைக் கடந்து மனதத்தை எல்லா திசைகளிலும் அடையாளம் காண்கின்றன. பிரபாகரனை நேரில் சந்திக்கக்கூடிய, அவரை இறுதிவரை சந்தித்து வந்தவர்களுடன் அந்தரங்கமாக உரையாடக்கூடிய உயர் நிலையில் இருந்தவர் தமிழினி. உயர்நிலைப் போராளிகள் அதிகமும் இறுதிப் போரில் கொல்லப்பட்டார்கள். அல்லது சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு நெருப்பு வளையங்களிலும் தப்பிப் பிழைத்தவர் தமிழினி. இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல். தவிர்க்கவே முடியாத நினைவோடைப் பதிவு இது.



இப்படிக்குத் தங்கள் அன்புள்ள - கி.பார்த்திபராஜா

# இப்படிக்குத் தங்கள் அன்புள்ள . . .
# (மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான கடிதங்கள்)

# கி.பார்த்திபராஜா

# விலை ரூ.130/-


பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியாயங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன்.

வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்து எதிரே அமர்ந்திருக்கும் காட்சி எந்தப் பேராசிரியருக்கும் எந்த நாட்டிலும் அமைந்திருக்காது. ஒரு செவ்வியல் நாடகத்தின் காட்சிபோல அது என் மனக்கண்ணில் விரிந்தது. ‘எனது மாமியாராக, மாணவியாக என்று இரு நிலைகளிலும் தாங்கள் பயணித்தீர்கள் என்றாலும் இரண்டையும் இணைக்கும் அடிச்சரடாக இருந்தது… நீங்கள் எனக்குத் –தோழர்- என்பதுதான்’ என்கிற பார்த்திபராஜாவின் பதில் கடிதத்தின் இறுதி வரிகள்தாம் இந்நாடகத்தின் க்ளைமேக்ஸ் ஆகி நிற்கிறது.

-    ச.தமிழ்ச்செல்வன் 

Friday 22 July 2016

நா.முத்துக்குமார் கவிதைகள்

# நா.முத்துக்குமார் கவிதைகள்
# ரூ.225/-

இதுவரை சினிமா பாடலாசிரியராக இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார் நா.முத்துக்குமார். அவர் முதலில் கவிதையில் இருந்துதான் தனது எழுத்து பயணத்தை ஆரம்பித்தார். அவரின் நான்கு கவிதைத் தொகுப்புகளையும் ஒரே புத்தகமாக இப்போது கொண்டுவந்திருக்கிறார்கள்.

சிந்துவெளிப்‬ பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்‬.பாலகிருஷ்ணன்

‪#‎ சிந்துவெளிப்‬ பண்பாட்டின் திராவிட அடித்தளம்
‪#‎ ஆர்‬.பாலகிருஷ்ணன்
‪#‎ ரூ‬.150/-
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்கள் கூட சிந்துவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை நிலைத்துள்ளன என்ற செய்தி முற்றிலும் புதியது, எவரும் கேள்விப்படாதது.
சிந்துவெளி நகரங்களின் “மேல் – மேற்கு : கீழ் - கிழக்கு” என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு. சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு.
நூலாசிரியர் திராவிட மொழியியலையும், சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளைப் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்.
- ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி ஆய்வாளர்

Wednesday 20 July 2016

தமிழகத்தில் புரதவண்ணார்கள்

#தமிழகத்தில் புரதவண்ணார்கள்
#த.தனஞ்செயன்
#(தமிழரின் குடித்தொழில் மரபு பற்றிய ஆய்வு நூல்)
#ரூ.200/-

பண்டைய இந்தியாவின் புராதன குழுக்களில் ஒன்றான புரதவண்ணார்களைப் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வாக இருப்பதால் கல்வெட்டு மற்றும் வாய்மொழித் தரவுகளை நடைமுறைத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அரிய முயற்சியை இந்நூல் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதியப் பிரிவினைகள் தோன்றிய வரலாற்றுப் பின்புலத்தையும் சில குறிப்பிட்ட சாதிகள் மட்டும் எப்படிக் காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அரிய சான்றுகளோடு இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது.
தீண்டாமையின் உச்சமாக விளங்கக்கூடிய எத்தனையோ சான்றுகளை இந்த நூலின் களப்பகுதித் தரவுகள் சுட்டுகின்றன.   



சென்னையின் கதை - பார்த்திபன்

‪#‎ சென்னையின்‬ கதை (வரலாறு)
‪#‎ பார்த்திபன் ‎ 

ரூ‬.500/-

மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்து போனாலும், ஏதோ ஒரு மூலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. . .

Tuesday 19 July 2016

வருகிறார்கள் - கரன் கார்க்கி

# வருகிறார்கள் (நாவல்)

#கரன் கார்க்கி  

#ரூ.295/- 


இன்றைய தலைமுறையின் கதை. இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள். அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. சென்னை போன்ற பெருநகர .டி இளைஞனின் வெளிநாட்டு கனவுகளையும் அவர்களது துயரங்களையும் விளக்கி பேசுகிறது. அவர்களின் பெற்றோர்களின் இயலாமையைப் பற்றி குடும்பச் சூழலைப்பற்றி விரிவாக இந்நாவல் பேசுகிறது.



கறுப்பர் நகரம் - கரன் கார்க்கி

#கறுப்பர் நகரம் (நாவல்)

#கரன் கார்க்கி

#ரூ.195/- 

சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான Novelised History. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கி சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார். சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.
வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாகஎது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.
இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.
- யுவகிருஷ்ணா